articles

மானியக் கோரிக்கையில் எதிர்பார்த்தது இல்லை!-எஸ்.ராஜேந்திரன்

தமிழக மின்துறை அமைச்சர் 26.06.2024 அன்று சட்டமன்றத்தில் எரிசக்தி துறையின் மானியக்கோரிக்கை தாக்கல் செய்தார். அதில் பதிவு செய்யப்பட்ட சில விஷயங்களை கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தனியார்மயம் கூடாது

தமிழ்நாட்டில் மின் பகிர்மான செயல்பாடுகள் பெரும் அளவில் அதிகரித்துள்ளதாலும், நாட்டின் பிற முக்கிய மாநிலங்களில் மின்சார பகிர்மான நிறுவனங்கள் தனித்து இருப்பதையும் கணக்கில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மறுசீரமைப்பு அவசியம் என்று கருதப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பாஜக அரசின் திட்டங்களை எதிர்க்கும் தமிழ்நாடு அரசு, டான்ஜெட்கோவை மேலும் மூன்றாக TNPGCL, TNGECL, TNPDCL என மூன்று கம்பெனிகளாக பிரிப்பது, மின்உற்பத்தியில் தனியாரை ஈடுபடுத்த மட்டுமே உதவும். இந்த புதிய நிறுவனங்கள் 09.02.2024 முதல் செயல்படத் துவங்கியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போதிய பணியாளர்கள் இல்லை

அதோடு ரூ.211 கோடியில் துணை மின்நிலையங்கள், ரூ.200 கோடியில் 2500 டிரான்ஸ்பார்மர்கள், ரூ.217 கோடி மதிப்பில் 19 பவர் டிரான்ஸ்பார்மர்கள் என அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இவை வரவேற்க வேண்டிய அறிவிப்புகளே! ஆனால் ஏற்கனவே உள்ள துணை மின் நிலையங்களில் போதிய பணியாளர்கள் இல்லை! பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ள இந்த துணை மின் நிலையங்களில் நிரந்தரப் பணிகளில் பணியாற்ற நிரந்தரப் பணியாளர்கள் இல்லை. அவுட்சோர்சிங் முறையில் தான் பராமரித்து வருகிறார்கள். 01.04.2003-க்கு பின் பணியில் சேர்ந்து ஓய்வுபெற்று தொழிலாளர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் இல்லாத காரணத்தால் அவுட்சோர்சிங் முறைக்கு வேலைக்கு வருகின்ற அவலநிலை தான் ஏற்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் உள்ள ஆரம்பக்கட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட எந்த நடவடிக்கையும் இல்லை. பொதுத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துவோம் என்று சொன்ன வாக்குறுதி நிறைவேறவில்லை.

தொழிற்சங்கங்கள் தொடர்ந்து காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என வேண்டுகோள் வைத்ததை கணக்கில் கொள்ளாமல், பட்டயம் படித்த 500 பேருக்கு அப்ரண்டிஸ் அடிப்படையில் ஓராண்டிற்கு பயிற்சி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. 

ஊழியர்களின் கடின உழைப்பு

3.32 கோடி மின் நுகர்வோர்களை கொண்ட தமிழக மின்சார வாரியம், நுகர்வோர் சேவை மதிப்பீட்டில் 2021-22 ஆண்டில் “B+”  மதிப்பீட்டில் இருந்து 2022-23 ஆண்டில் “A” மதிப்பீட்டிற்கு மாறியுள்ளது என்று சொன்னால், கூடுதல் வேலைப் பளுவை சுமந்து சிறப்பாக பணி செய்த ஊழியர்கள், அலுவலர்கள், பொறியாளர்களால் தான் அது சாத்தியமானது என்பதை அரசு அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். காலம் காலமாய் தொழிற்சங்கம் போராடிப் பெற்ற, இறந்துபோன ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை 317 பேருக்கு வழங்கியதை சாதனையாக சொல்லும் அரசு, அரசாணை 197ன்படி குடும்பநல நிதியை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியதை மின்வாரிய ஊழியர்களுக்கு கொடுக்க மறுப்பது சரியல்ல? கடந்த 2024 மார்ச் மாதம் சட்டமன்றத்தில், மின் ஊழியர்கள் மின் விபத்தில் இறந்தால் ரூ. 10 லட்சம் சிறப்பு நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் அறிவிப்பாகவே உள்ளது.

ஜூலை 9 காத்திருப்பு போராட்டம்

கடந்த ஓராண்டுகளாக 6483 பேர்களுக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது உண்மையே!

அது ஊழியர்களின் தகுதிகாண் அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளது. மின் கணக்கீடு பணிகளைச் செய்ய ரூ.30 லட்சம் செலவில் செயலி, புளூடூத், கனெக்டர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், மொபைல் போன், நெட் வசதி (Internet) இவைகளை ஏற்பாடு செய்யவில்லை. ஊழியர்கள் தங்களது சொந்த போனையும், நெட்டையும் உபயோகிக்க வேண்டும் என சொல்வது சரியா?

மேலும் 84 துணை மின் நிலையங்களை அவுட்சோர்சிங் விடுவது சரியல்ல. எனவே இந்த மானியக்கொள்கையில் மின் ஊழியர்கள் எதிர்பார்த்த நியாயம் கிடைக்கவில்லை! ஆகவே ஜுலை 9-ல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை மின் ஊழியர்கள் நடத்துகிறார்கள்.

-எஸ்.ராஜேந்திரன் பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு)



 

;